Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான‌ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம்.

மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக‌ அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும்.

கிரைய ஆவணங்கள் உட்பட இதர ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் முறைப்படி அந்த சொத்தை முதலில் யார் வாங்கினாரோ அவருக்கே அந்த சொத்து உரிமையுடையதாகும்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#ஒரே_சொத்தை_இருவருக்கு_விற்றால், #ஒரே_சொத்தை_இருவர்_வாங்கியிருந்தால், #சொத்து, #நிலம், #வீடு, #கிரையம், #கிரைய_ஒப்பந்தம், #மாவட்ட‍_பதிவாளர், #நிர்வாகம், #காவல்நிலையம், #ஏமாற்றுதல், #விதை2விருட்சம், #If_the_same_property_is_sold_to_two_persons, #if_the_same_property_is_purchased_by_two_persons, #property, #land, #house, #purchase, #purchase_agreement, #district, #registrar, #administration, #police, #deception, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #sale_Agreement

4 Comments

  • சொத்து மற்றும் பத்திரப்பதிவு சார்ந்த வினா விடை

    வினா:- சொத்து என்றால் என்ன?
    விடை:- ஒவ்வொரு நபரும் இந்த உலகத்தில் தான் உழைத்துச் சம்பாதித்துச் சேமித்த பணத்தைக்கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். அப்படி வாங்கப்பட்ட பொருள்களைத் தாங்கள் அனுபவித்தது போக எஞ்சிய பொருள்களைத் தங்கள் வாழ்நாளைக்குப்பிறகு இந்த உலகத்திலேயே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். அப்படி விட்டுவிட்டுச் செல்லுகின்ற பொருள்கள் அனைத்துமே பின்வரும் சந்ததியினருக்குச் சொத்தாக மாறிவிடுகின்றது.
    வினா:- சொத்து எத்தனை வகைப்படும்?
    விடை:- சொத்து வகைப்படும்.
    a) அசையும் சொத்த்து
    b) அசையா சொத்து
    வினா:-அசையா சொத்து எத்தனை வகைப்படும்?

    3 விடை:- அசையா சொத்து இரண்டு வகைப்படும்.
    a) சொந்தப்பட்ட சொத்து
    b) உரிமைப்பட்ட சொத்து

    வினா:- சொந்தப்பட்ட சொத்து என்றால் என்ன?
    விடை:- ஒருவர் தன் வாழ்நாளில் தானே உழைத்துச் சம்பாதித்த பணத்தைக்கொண்டுத் தனுக்குத் தேவையான சொத்துக்களைத் தன் பெயரிலேயே வாங்கினால் அந்த சொத்து முழுவதும் அவருக்குச் சொந்தப்பட்ட சொத்தாகவே கருதப்படும். இவைகளனைத்துமே அவர் முழுகட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களாகவே கருதப்படும். இவைகளனைத்தும் பெரும்பாலும் கிரயப்பத்திரம் மூலமாகவே வாங்கப்படுபவை. இப்படிப்பட்ட சொத்துக்களைத் தன் வாழ்நாளிலேயே தன்னுடைய வாரிசுகளுக்குத் தன் விருப்பப்படி கூடுதல் குறைவாக பிரித்துக்கொடுக்கவோ அல்லது பிற நபர்களுக்கு விற்கவோ முழு அதிகாரமும் சொத்தின் சொந்தக்காரருக்கு உண்டு.
    வினா:- உரிமைப்பட்ட சொத்து என்றால் என்ன?
    விடை:- ஒருவர் தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தைக்கொண்டு கிரய ஆவணம் அல்லது ஏனைய பிற நன்கொடை ஆவணத்தின் முலம் வாங்கப்படாத சொத்துக்கள், மற்றும் இவருக்குக் கிடைக்கப்பெற்ற பூர்வீக சொத்துக்கள், இவைகளனைத்துமே இவரின் வாரிசுகளுக்கும் கட்டுப்பட்ட சொத்துக்களாக கருதப்படுவதால், இப்படிப்பட்ட சொத்துக்கள் தன் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தாலும், இவைகளனைத்தும் இவருக்கு உரிமைப்பட்ட சொத்துக்களாகக் கருதப்படும். மேற்கண்ட சொத்துக்களைத் தன் வாரிசுகளுக்குத் தன் விருப்பப்படி கூடுதல் குறைவாக பிரித்துக்கொடுப்பதும் பின்வரும் காலங்களில் பல சட்ட சிக்கலுக்கு வழி வகுத்துவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவதனால் மேற்கண்ட சொத்துக்கள் அனைத்துமே இவருக்கு உரிமைப்பட்ட சொத்துக்களாகவே கருதப்படும்.
    வினா:- சொத்து கிடைக்கும் வழிகள் யாவை
    விடை:- a) Application by Law சட்டத்தின் வழி ,இயல்பான முறையில் முறையில்; ஆவணங்களின் மூலம் பெறக்கூடிய சொத்துக்கள் – fகிரயம் நன்கொடை மற்றும் பாகப்பிரிவினை, உயில் ஏற்பாடு ஆவணம், பரிவர்த்தனை விடுதலைப்பத்திரம் போன்றவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பரம்பரை சொத்துக்கள்

    b) Operation by Law - சட்டத்தின்வழி நடவக்கை எடுக்கப்பட்டு நீதி மன்ற ஆணை மூலம் கிடைக்கப்பெற்ற சொத்துக்கள். கிரயம் நன்கொடை மற்றும் பாகப்பிரிவினை, உயில் ஏற்பாடு ஆவணம், பரிவர்த்தனை விடுதலைப்பத்திரம் போன்றவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பரம்பரை சொத்துக்கள்

    7) வினா:- What are the documents to be compulsorily registered?
    எந்தெந்த ஆவணங்கள் முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டியவை?

    7) விடை:- a) னுரு ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய அசையா சொத்துக்கள். b) ஒரு வருடம் மற்றும் அதற்குமேல் உள்ள வாடை & குத்தகைப்பத்திரங்கள்.

    வினா:- சொத்துக்கள் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமா?
    விடை:- பதிவு இல்லையென்றால் ஆதாரம் இல்லை There is no evidence for the property bequeathed..

    As per sec – 54 of Transfer of property Act 1882 the tittle of a immovable property can be transferred only by a Registered Document.
    வினா:- ஒரு ஆவணப்பதிவிற்கான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தும் தேதி, ஆவணத்தைத் தொடங்கும் தேதி, அது பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் தேதி, பதியப்படும் தேதி, ஆகியவை பற்றி விளக்கம் தருக!
    விடை:- (a) Date of purchase of stamps – ஒரு சொத்து ஒப்பந்தம் செய்த தேதிக்குப்பின்னரும் அல்லது அதற்கு முன்னரும், பதியப்படவேண்டிய ஆவணம் தொடங்கும் தேதிக்கு முன்னரும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்திய தேதி இருக்கவேண்டும்)

    (b) Date of Execution - ஒரு குறிப்பிட்ட ஆவணத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்திய தேதிக்குப்பின்னர் பதியப்படும் ஆவணத்தைத் தொடங்கும் தேதி இருக்கவேண்டும்

    (c) Date of Presentation - ஒரு ஆவணம் தொடங்கிய தேதிக்குப் பின்னரும், ஆவணம் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடுவிற்கு முன்னரும், பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் சமர்ப்பிக்கும் தேதி இருக்க வேண்டும்)

    (d) 120 days for Presentation - ஒரு ஆவணம் தொடங்கிய தேதியிலிருந்து பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் சமர்ப்பிக்கும் காலக்கெடு கட்டணமில்லாமல் 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் மேலும் 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்)

    (e) Date of Registration - முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆவணத்தைப் பரிசீலனை செய்தபின்னர், அது ஆவணப்பதிவிற்கு அனைத்து விதத்திலும் தகுதியுடையாத இருக்கும்பட்சத்தில், அந்த ஆவணத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக்கட்டணம் செலுத்திய பின்னர், அதற்கான நிரந்தர எண் கொடுக்கப்பட்டு ஆவணம் பதியப்படும். குறைபாடுடைய ஆவணமாக இருந்தால், தற்காலிக எண் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட ஆவணம் குறிப்பிட்ட நாட்கள் வரை (குறை சரி செய்யும் வரை) பதிவாளர் அலுவலகத்திலேயே பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் குறை சரி செய்யப்பட்டுவிட்டால், அதற்குண்டான பதிவுக்கட்டணம் செலுத்தியிருக்கும்பட்சத்தில் நிரந்தர எண் கொடுக்கப்பட்டு ஆவணம் பதிவு செய்யப்படும். குறை சரி செய்யப்படவில்லையென்றாலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆவணத்தைக் திரும்பக்கோரும் பட்சத்தில் பதிவாளர் சம்பந்தப்பட்ட புத்தகத்தில் குறிப்பு செய்த பின்னர், சொத்து வாங்குபவர் வசம் ஆவணம் திரும்பக் கொடுக்கப்படும். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணமும் பதிவாளரால் திருப்பித்தர மாட்டாது. இது சம்பந்தமாக வேறு எந்த கட்டணமும் வாங்கப்படவும் மாட்டாது வசூலிக்கப்படவும் மாட்டாது.

    வினா:- பதிவுக்குக் கொண்டுவரும் சொத்துச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பதிவுத்துறையில் எந்தெந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படுகின்பற்றன?
    விடை:- a) (Book – I) முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்திய கிரய ஆவணம், நன்கொடை ஆவணம், ஏற்பாடு ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், பரிவர்த்தனை ஆவணம் விடுதலைப் பத்திரம் ஆவணம் போன்ற ஆவணங்கள் அனைத்தும் பதிவுத்துறையில் புத்தகம் ஒன்றில் பதியப்படும். இவைகளனைத்தும் வில்லங்க சான்றிதழில் கண்டிப்பாக இடம்பெறும்.

    b) (Book –II) பதிவுத்துறையில் பதியவேண்டி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில், அவகளனைத்தும் பதிவுத்துறையில் உள்ள புத்தகம் இரண்டில் பதியப்பட்டு தற்காலிக எண் கொடுக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவில்லையென்றாலும் அல்லது சம்பந்தப்பட்டவர் ஆவணத்தைத் திரும்பிக் கேட்டாலும் அதே புத்தம் இரண்டில் குறிப்பு செய்த பின்னர் ஆவணம் சம்பந்தப்பட்டவரிடம் திருப்பிக் கொடுக்கப்படும். இவைகளெல்லாம் பதிவுத்துறையில் Challenged Documents என்று சொல்லப்படுகின்றது. குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த ஆவணப்பதிவிற்கான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டால் போதுமான முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தியிருக்கும்பட்சத்தில், மீண்டும் புத்தகம் இரண்டில் குறிப்பு செய்துவிட்டு ஆவணம் பதியப்பட்டு நிரந்தர எண் கொடுக்கப்படும். இவைகளனைத்தும் வில்லங்க சான்றிதழில் இடம் பெறாதவை.

    c) (Book-III) பதிவாளர் அலுவலகத்தில் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட உயில் பத்திரம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ரத்து பத்திரம் கொடிசில் (Codicil) என்று சொல்லப்படும் உயில் திருத்தல் பத்திரம் அனைத்தும் புத்தகம் மூன்றில் பதியப்படும். இவைகளனைத்தும் வில்லங்க சான்றிதழில் இடம் பெறாதவை.

    d) (Book-IV) அனைத்துவிதமான அதிகாரப் பத்திரங்கள் மற்றும் அது சம்பந்தமான ரத்துப் பத்திரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள புத்தம் நான்கில் பதியப்படும். இவைகளனைத்தும் வில்லங்க சான்றிதழில் இடம் பெறாதவை.

    e) (Book V) உயில் எழுதுபவர்கள் முறையாக எழுதப்பட்ட உயில் தன்னுடைய வாழ்நாள்வரை ரகசியமாக காக்கப்படல் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை நன்றாக ஒட்டப்பட்ட ஒரு உரையில் போட்டு சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் ஒப்படைத்தால் அந்த உயில் போடப்பட்டுள்ள உரை பிரிக்கப்படாமல் பதிவுத்துறையில் உள்ள புத்தம் ஐந்தில் பதியப்பட்டு அந்த உயில் எழுதியவர் வாழ்நாள் வரை உரை பிரிக்கப்படாமல் பதிவுத்துறையிலேயே பாதுகாக்கப்படும். இவர் இறப்பிற்குப்பின்னர் அவருடைய வாரிசுதாரர்கள் நேரில் சென்று உயில் எழுதியவரின் இறப்புச்சான்றிதழுடன் பதிவாளரை அணுகி ஏற்கனவே பதியப்பட்ட உரை பிரிக்கப்படாத உயிலைப் பெற்றுக்கொண்டு உயில்படி இறந்தவரின் சொத்துக்களைப் பாகப்பிரிவினைச் செய்து கொள்ளலாம்.

    வினா:- (Conveyance or Sale Deed) – விற்பனை ஆவணம் பதியும் முன் கவனிக்கவேண்டியவை

    10.. விடை:- (a) விற்பவர் மற்றும் வாங்குபவர் – மற்றும் இரண்டு சாட்சிகள்
    அடையாள அட்டையோடு பரிசீலிக்க வேண்டும்
    .
    (b) மூலப்பத்திரங்கள் – அசல் ஆவணங்கள் பரிசீலனை செய்து இடத்தையும்
    நேரில் பார்வையிடல் வேண்டும்

    (c) தொடர்பு ஆவணங்கள் – தொடர்பு ஆவணங்களான கிரயம், செட்டில்மென்ட்
    கப்பிரிவினை, உயில், போன்றவற்றை பரிசீலனை செய்து செய்து
    உரிமையாளரை உறுதி செய்து கொள்ள வேண்டும்

    (d) வில்லங்க சான்றிதழ் குறைந்த பட்சம் முப்பது வருடங்களுக்கு எடுத்து
    சொத்தின் உரிமையாளரை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    (e )பட்டா, சிட்டா, Form– 40 போன்றவற்றைப் பரிசீலனை செய்து உரிமையாளரை
    உறுதி செய்து கொள்ள வேண்டும்

    (f) Ceiling Land or Land Acquisition. இவற்றிற்கு மேற்கண்ட சொத்து
    உட்படுத்தப்படவில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்

    g) கிரய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் திரும்பப்பெறப்படல் வேண்டும்

    (h) G.L.R. Value – Market Value – Real Value போன்றவற்றை ஆய்வு செய்து
    இவற்றில் எது அதிகமோ அந்த தொகையினை உறுதி செய்து கொள்ள
    வேண்டும்.

    (i) புதுச்சேரி - Stamp Duty – 10% Reg Fees 0.5%
    தமிழ்நாடு - Stamp Duty – 7% Reg Fees 4%

    (j) E.C. after Registration. கிரயப்பதிவு முடிந்த பின்னர் வில்லங்க சான்றிதழ் பெற்று
    அதில் இறுதியாக கிரயம் வாங்குபவர் பெயர் வருகின்றதா என்று உறுதி
    செய்துகொள்ள வேண்டும்.

    (மேற்கொண்டு தெளிவுபெற சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர்களையோ அல்லது சட்ட நூல்களையோ படித்துப் புரிந்துகொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் என்னுடைய ஆலோசனைகள் மட்டுமே)

    C.Rasappa
    Sub-Registrar & Treasury Officer (Rtd.,)

  • Coumarasamy Rasappa

    சொத்து மற்றும் பத்திரப்பதிவு சார்ந்த வினாக்களும் விடைகளும்

    வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப்பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும்போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்டும் மகன் மகளுக்குச் சமமாகப் பிரித்துத்தான் கொடுக்க வேண்டுமா?

    விடை:- தானம் பெறுபவரின் ஒப்புதலோடு, 8% முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் 4% பதிவுக்கட்டணமும் செலுத்தி பத்திரப்பதிவின் மூலம் முறையாக தானம் கொடுத்த சொத்தைத் திரும்பப் பெற இயலாது. அது தானம் பெற்றவருக்குச் சொந்தமான சொத்து. ஆகவே, எந்த சொத்தாக இருந்தாலும் சட்டப்படி தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால், அன்றைய தேதி முதல் அந்த சொத்து அவருக்குச் சொந்தப்பட்ட சொத்தாகவே கருதப்படும். இதேபோல் ஒரு விழுக்காடு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் ஒரு விழுக்காடு பதிவுக்கட்டணமும் செலுத்தி செட்டில்மெண்ட் செய்து முழு சொத்தின் அனுபவ உரிமையினைக் கொடுத்திருந்தாலும் இதே நிலைதான். ஆக, தானம், என்றாலும், செட்டில்மெண்ட் என்றாலும், உரிமை மாற்றப்பட்ட சொத்து என்று பொருள். எனவே, உங்கள் மனைவிக்குத் தானமாகக் கிடைத்த சொத்தைப் பொறுத்தவரை உங்கள் மனைவியின் காலத்திலேயே அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் சொத்து மாற்றம் செய்து கொடுக்கலாம். ஆனால், அவருடைய காலத்திலேயே மேற்கண்ட பாகசொத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லையென்றால். அவருடைய காலத்திற்குப் பின்னர் அவருக்குத் தானமாகக் கிடைக்கப்பெற்ற சொத்து அவருடைய சந்ததியினருக்குப் பூர்வீக சொத்தாக மாறுவதால், அவருடைய மகன் மற்றும் மகள் இருவரும் தன் தாய்க்கு தானமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தைச் சமமாக பிரித்துக்கொள்வார்கள். இதில் வேறு யாரும் தலையிட முடியாது.

    வினா:- என் பெயர் கண்ணன். நான் மன்னார்குடியைச் சேர்ந்தவன். எனக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உண்டு. நான் ஒரு சிறு விவசாயி. எனக்குப் பூர்வீகமாகக் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தில் உழைத்து, அந்த உழைப்பின்மூலம் கிடைத்த வருமானத்தைக்கொண்டும், எனது பூர்வீகச்சொத்தை விற்றும் அவற்றின் மூலம் வந்த பணத்தைக்கொண்டு வேறொரு சொத்து எனது பெயரில் என்காலத்திலேயே வாங்கப்பட்டது. பின்னர், என் மனைவி இறந்துவிட்டாள். காலப்போக்கில் எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், குடும்பத்திலிருந்து விலகி, என் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் ஒரு முதியோர் இல்லத்திற்குத் தானமாக எழுதிக்கொடுத்துவிட்டு என்னுடைய இறுதிக்காலம்வரை அங்கேயே இருந்துவிடலாம் என்றும் தீர்மானித்துவிட்டேன். இது சரியா அல்லது தவறா?

    விடை:- நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து விலகி முதியோர் இல்லத்தில் சேர்வது என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதுபோல் உஙகள் சொந்த உழைப்பின்மூலம் வந்த தனிப்பட்ட பணத்தைக்கொண்டு உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் அந்த சொத்தைத் தானமாகக் கொடுப்பதும் பிரித்துக் கொடுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பமே. ஆனால், நீங்கள் உங்கள் பூர்வீக சொத்தை விற்று அதன்முலம் வந்த பணத்தைக்கொண்டும், உஙகள் சொந்த உழைப்பின்மூலம் வந்த தனிப்பட்ட பணத்தைக்கொண்டும், மொத்தமாக சேர்த்து வேறொரு புதிய சொத்தை வாங்கியிருந்தாலும், அந்த புதிய சொத்து உங்களுக்குக் கிடைத்த பூர்வீக சொத்தை ஆதாரமாக வைத்து வாங்கியிருப்பதால் அந்த சொத்தும் ஒரு வகையில் உங்களுடைய வாரிசுகளுக்குக் கட்டுப்பட்ட பரம்பரை சொத்தாகவே பார்க்கப்படல் வேண்டும். எனவே, அந்த சொத்து முழுவதுமாக உங்கள் வாரிசுகளின் அனுமதி இல்லாமல் முதியோர் இல்லத்திற்குக் கொடுப்பதும் எதிர் காலத்தில் பிரச்னைக்கு வழி வகுத்துவிடும். ஆனால், மேற்கண்ட சொத்தைப் பொறுத்தவரை, மூன்று பாகங்களாகப் பிரித்து அதில் உங்களுக்குச் சேரவேண்டிய ஒரு பாகத்தை மட்டும் உங்கள் விருப்பம்போல் முதியோர் இல்லத்திற்கு எழுதிக்கொடுக்கலாம். எஞ்சிய மூன்று பாகங்களும் உங்களின் மூன்று குழந்தைகளும் அடைந்து கொள்ளவேண்டும் .

    *****************

  • சொத்து மற்றும் பத்திரப்பதிவு சார்ந்த வினா விடை

    1.வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்துவிட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்கை சரியா? இதானால் வருமானவரி பாதிப்பு யாருக்கு அதிகமாகும்..

    விடை:- பதினெட்டு வயது நிரம்பிய சொத்துக்குரியவர் யார் ஒருவரும் யாருக்கு வேண்டுமானாலும் தகுதியின் அடிப்படையில் எந்தவித பிரதிபலனும் பெறாமல், தானம் கொடுக்கலாம். தந்தை மகன் இவர்களுக்கிடையில் நடந்த தனமாக இருந்தாலும் தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே தானம் பெற்றவர் மேற்கண்ட சொத்தைப்பெற சம்மதம் தெரிவிக்க வேண்டும். மாறாக, தானம் பெற்றவர் அந்த தானத்தை ஏற்க மறுத்தால், பதியப்பட்ட தானப்பத்திரம் செல்லத்தக்கதல்ல. மேலும் இந்த தனபாத்திரம் முந்தய சட்டப்படி தானம் ஏற்பவர் சம்மதமின்றி பதியப்பட்டுவிட்டாலும் மகனானவர் தான ஏற்புபுப்பத்திரம் தயார் செய்து தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இதனால் வருமானவரி பாதிப்பு இருவருக்குமே கிடையாது. ஆனால், தானப்பத்திரம் பதிவதற்கான 8 % முத்திரைத்தாள் கட்டணம், 4 % பதிவுக்கட்டணம் மற்றும் செலவுத்தொகை முழுவதும் திரும்பப்பெற இயலாது. சொத்து கைமாறியதும் செல்லாது. முந்தைய நிலையிலே சொத்து தந்தையிடமே இருக்கும்.

    வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப்பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச்சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக்களையும் ஒரு விழுக்காடு முத்திரைத்தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பாத்திருக்கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவிக்குச் சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
    விடை:- மாயாண்டி அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் சமபாகம் கொடுத்து அதன் முழு அனுபோக பாத்தியத்துடன் முறையாக தானப்பத்திரம் எழுதி பதியப்பட்டுவிட்டால் அந்த தானப்பத்திரம் ரத்து செய்யப்படுவதற்கு ஏற்புடையது அல்ல. மேலும், அதனை வற்புறுத்தி ரத்து செய்ய வைத்ததும் சட்டப்படி ஏற்கமுடியாதது. கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வாரிசுரிமை திருத்தச்சட்டம் பிரிவு 39 இன்படி பூர்வீக சொத்தில் அனைத்து பெண் வாரிசுகளுக்கும் சமபாகம் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். அதை விடுத்து, இரண்டாவது மருமகன் தன்னுடைய மாமனாரை மிரட்டி அனைத்து சொத்துக்களையும் தன் பெயரிலேயே ஏற்பாடு ஆவணத்தின் மூலம் சொத்து மற்றம் செய்துகொண்டதும் சட்டப்படி குற்றமே. மேலும் மருமகன் என்பவர் ரத்த சம்பந்தமான செட்டில்மெண்ட் உறவுகளில் வரமாட்டார்.

    ஆனால் மகள் மட்டுமே ரத்த சம்பந்தமான உறவுகளில் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மூன்றாம் நபர்களுக்கிடையில் நடக்கும் செட்டில்மெண்டாக கருதப்பட்டதால் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மாறுபட்டிருக்க வேண்டும். அது இல்லையென்றாலும் செட்டில்மெண்ட் செல்லாது. எனவே பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றால், இவருக்குச் சாதகமாக நீதி கிடைக்க வாய்ப்புள்ளது.

    (மேற்கொண்டு தெளிவுபெற சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர்களையோ அல்லது சட்ட நூல்களையோ படித்துப் புரிந்துகொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் என்னுடைய ஆலோசனைகள் மட்டுமே)

    C.Rasappa

    Sub-Registrar & Treasury Officer (Rtd.,)
    Date:30.08.2020, Place:Seatle, USA

  • வினா:- என் பெயர் கோபால். நான் திருவாரூர் மாவட்டம் – புலிவலத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்ற பேராசிரியர். நான் வருமான வரி செலுத்தும் நபராக இருப்பதால், நான் எனக்குச் சொந்தமான பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை என் மகனுக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளேன். இதற்கு அரசு நிர்ணயித்த 1 %முத்திரைத்தாள் கட்டணமும் 1 %பதிவுக்கட்டணமும் செலுத்தியுள்ளேன். என்னுடைய நண்பர் ஒருவர் இது தானம் அல்ல செட்டில்மெண்ட் தான் என்று கூறுகின்றார். எனவே இதில் கிடைக்கப்பெற்ற பத்து லட்ச ரூபாயும் வருமான வரி கணக்கில் காட்டவேண்டும் என்றும் கூறுகின்றார். அப்படியென்றால் இந்த முறையினால் எனக்கு வருமான வரி கணக்கில் பாதிப்பை ஏற்படுத்துமா?

    விடை:- தானம் என்பது வேறு, செட்டில்மெண்ட் என்பது வேறு. அரசு நிர்ணயித்த
    1 %முத்திரைத்தாள் கட்டணமும் மற்றும் 1 %பதிவுக்கட்டணமும் செலுத்தி பதிவு செய்யப்படுவது தானசெட்டில்மெண்ட் என்றாலும், அது ரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளும் செட்டில்மெண்டைத்தான் குறிக்கும்.

    செட்டில்மெண்ட் என்றால் ஈட்டுத்தொகை உண்டு. ஆனால் , தானம் என்றால் ஈட்டுத்தொகை அல்லது பிரதிபலன் எதுவுமே கிடையாது. இரண்டு ஆவணத்திலும் சொத்தின் மதிப்பு காட்டவேண்டும் என்பது கட்டாயம். தானம் என்றால் திரும்பப்பெற முடியாதது. தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே தானம் பெற்றவர் இதற்கான சம்மதம் கொடுக்க வேண்டும். ஆனால், செட்டில்மெண்டாக இருந்தாலும், தான செட்டில்மெண்டாக இருந்தாலும், திரும்பப்பெற வாய்ப்புள்ளது. ஒவ்வொன்றுக்குமே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டண விகிதம் வேறுபடும். தானம் என்றால் முத்திரைத்தாள் கட்டணம் 8 %ம் பதிவுக்கட்டணம் 4 %ம் செலுத்தவேண்டும். அதுபோல் செட்டில்மெண்டாக இருந்தாலும், தான செட்டில்மெண்டாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளும் செட்டில்மெண்டாக இருந்தால், முத்திரைத்தாள் கட்டணம் 1 %ம் பதிவுக்கட்டணம் 1%ம் செலுத்தவேண்டும். மூன்றாம் நபருக்கு செட்டில்மெண்ட் கொடுத்தாலும், முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் மாறுபடும். அவ்வளவுதான். ஒவ்வொன்றுக்கும் தன்மை மட்டுமே வேறுபடும். தானமாக இருந்தாலும், செட்டில்மெண்டாக இருந்தாலும், தானசெட்டில்மெண்டாக இருந்தாலும், CAPITAL GAIN TAX கணக்கில் காட்டப்படல் வேண்டும். 8% முத்திரைத்தாள் மற்றும் 4%பதிவுக்கட்டணம் செலுத்தி பிரதிபலன் வாங்காமல் சொத்து தானமாகக் கொடுக்கப்பட்டால் சொத்துக் கொடுத்தவருக்கு வருமானவரி கணக்கில் பாதிப்பு இருக்காது.

    குறிப்பு :-
    மேற்கண்ட பதிவில் ஏற்படும் உங்கள் சந்தேகங்களுக்குச் சம்பந்தப்பட்ட சட்ட நூல்களையே அல்லது சட்ட வல்லுநர்களையோ அணுகவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாகவும் எனக்கு தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் எந்த இழப்புகளுக்கும் எழுத்தாளர் பொறுப்பாகமாட்டார்.

    இவண்
    குமர. ராசப்பா சார் பதிவாளர் & கருவூல அதிகாரிபணி நிறைவு)
    மின் அஞ்சல் rasappa31@gmail.com

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: